Saturday, December 21, 2013

பாரதியாரின் திருநெல்வேலி பள்ளிநாட்கள்






முனைவர் ச.மகாதேவன்,
தமிழ்த்துறைத்தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி],
திருநெல்வேலி

மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது.
எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.
“என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண் எய்திய தாய்        (சுயசரிதை: 20)
1889 ஆம் ஆண்டில் பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் வள்ளியம்மாள் எனும் மங்கையை மறுமணம் செய்கிறார்.பாட்டி பாகீரதியின் அன்பும் தாய்வழிப்பாட்டனார் ராமசாமிஐயரின் அன்பும் பாரதியைச் செழுமைப்படுத்தின.பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசைஇருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப்  வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
    
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத்து ஏறிஇ றங்கியும்
    
என்னொடுஒத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
    
வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
    
தோழமை பிறிதின்றி வருந்தினேன்
(சுயசரிதை: 4)

தோழமை ஏதுமின்றி வருந்தியே அவர்தம் குழந்தை நாட்களைக் கழித்துள்ளார்.
பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் தொடங்கிய காட்டன் ஜின் பாக்டரி செயல்படமுடியாத நிலையில் வறுமை ஆட்டிப்படைத்தது.கையில் வைத்திருந்த பணத்தை ஆங்கிலஅரசின் சதியால் தன் தந்தை இழந்ததைப் பாரதி துயரத்துடன் பதிவு செய்கிறார்.
“ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியிலிழந்தனன்”
ஏழுவயதில் கவிபுனையகூடிய ஆற்றல்பெற்றிருந்த சுப்பையாவுக்கு எட்டயபுர அரண்மனையில் 1893 ஆம் ஆண்டு சிவயோகியார் தலைமையில் புலவர் குழு ‘’பாரதி’’ என்ற பட்டத்தை வழங்கியது.
அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய பாரதியானார்.இத்தனைத் திறன்களைத் தன்னகத்தே பெற்ற அருமைமகன் சுப்பிரமணிய பாரதியை இன்னும் உயர்த்திப் பார்க்க சின்னச்சாமி அய்யர் ஆசைப்பட்டார்.திருநெல்வேலி ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி அவர் நினைவுக்கு வந்தது.
திருநெல்வேலி டவுண் தெற்குப்புதுத்தெருவில் 1859 ஆம் ஆண்டு ஆங்கிலமும் தமிழும் ஒன்றாகக் கற்க சைவப்பெருமக்களால் தொடங்கப்பட்ட ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி, பின்நாளில் 1861 ஆம் ஆண்டு தற்போதுள்ள திருநெல்வேலி சந்திப்புக்கு அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு இந்துக் கலா சாலை  என்று பெயர் மாற்றம் பெற்றது.
 எட்டயபுரத்தில் மகன் சுப்பையா இருந்தால் வறுமை மிகவும் பாதித்துவிடும் என்பதால் பாரதியைத் திருநெல்வேலியில் உள்ள ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி என்ற பெயரில் அன்றும், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி என்று இன்று அழைக்கப்படும் ம.தி.தா இந்துக் கல்லூரிப் மேல்நிலைப்பள்ளியில் சின்னசாமி கொண்டு சேர்க்கிறார்.
இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் மகாகவி பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக் கற்கமுடியவில்லை.மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய”மூன்றுகாதல்” எனும் கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ‘’பள்ளிப் படிப்பினிலே-திபற்றிட வில்லை’’ என்ற வரி கவனத்திற்குரியது.

“பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா!
என்று பாரதி எழுதியுள்ள பாடல்வழி,பாரதியின் இயற்கை நாட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழின் மீதும் தமிழ்இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக்கல்வியை ஏற்க முடியவில்லை.எட்டயபுரத்தில் இருந்த கல்விபயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது.தந்தையின் வறுமை அவரை அரித்தது.மனம் நிம்மதி இழந்து தவித்தது
செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
    
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
    
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!
-சுயசரிதை
.சனவரி 24,1897 ஆம் ஆண்டு தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்பமுடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக பாரதியே அனுப்பி வைத்தான்.
‘’கைப்பொருளற்றான் கற்பதெவ்வகை?
பொருளானன்றிக் கல்வியும் வரவில
கல்வியானன்றிப் பொருளும் வரவில
முதற்கட் கல்வியே பயிறல் முறைமையா
மதற்குப் பொருளிலையாதலினடியேன்
வருந்தியே நின்பால்வந்தடைந்தனன்’’
கல்வி பயில்வதற்குப் பெரும்பொருள் இருத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி’’ஊழியன் இளசை சுப்பிரமணியன்’’ என்ற பெயரில் பாரதி வரைந்த சீட்டுக்கவி அன்றைய நிலையின் படப்பிடிப்பு.அப்போது பாரதியார்  ந்தாம்படிவம் அதாவது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்.
திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார்.புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார்.
1897 ஜூன் 27 பதினைந்துவயது ...பாரதிக்கும் கடையத்தில் வசித்த செல்லப்பாஐயரின் மூன்றாம்பெண்குழந்தை செல்லம்மாவுக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடித்தவுடன் பாரதி பள்ளிக்குச் செல்லத்தொடங்கிவிட்டார்.
1898 ஜூலை 20 ஆம் நாள் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள்.பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் மரணமடைகிறார்.பள்ளிப்படிப்பு தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையார் குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள் இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்த அரிய செய்தியை வரலாற்றாசிரியர் செ.திவான் ‘’பாரதி செல்லம்மாள் உயில்’’ என்ற நூலில் பதிவு செய்கிறார்.பாரதியின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்தாவது படிக்க வைக்கவேண்டும் என்று போராடிய பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையாரின் மனஉறுதியை என்ன சொல்வது?
திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்த பாரதியை 1898 ஆம் ஆண்டு காசிக்கு அழைத்ததும் ,தங்குவதற்குத் தன் வீட்டில் இடம்தந்து காசி ஜெய்நாராயண கலாசாலையில் பாரதி பள்ளிப்படிப்பைத் தொடர்வதற்கும் காரணம் பாரதியின் அத்தை குப்பம்மாள்தான்.திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.
மகாகவி பாரதியின் பள்ளிவாழ்வில் நிறைய சவால்களை அவர் எதிர்கொண்டார்.சிறுவயதில் தாயை இழந்து திருநெல்வேலியில் பள்ளிப்படிப்புக்குக் கூடத் தந்தையால் பணஉதவி செய்யமுடியா நிலையில் எட்டயபுரம் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக சிறுவயதில் அனுப்பி வைத்த மனஉறுதி வியக்க வைக்கிறது.
பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழுவயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோதுதான் எதிர்கொண்டான்.
‘’மனதில்உறுதி வேண்டும்’’ என்ற வரிகள் அவன் பட்டஅடிகளில் இருந்து பிறந்ததைக் காணமுடிகிறது. ரசிக்கும்மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது.
ஆங்கிலேயரின் கொடுமையால் வணிகம் இழந்து நட்டப்பட்டு நின்ற சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார். இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஐந்து வயதில் தாய் இறந்துபோனாள்,

. பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார் பாரதியார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:
தந்தைபோயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
    
தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
    
திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
    
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?
(சுயசரிதை: 46)

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே தந்தையின் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது.எட்டயபுரம் வீட்டை அடகுவைத்தாவது பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற பாட்டி பாகீரதிஅம்மையாரின் நெஞ்சுரம் நமக்கு நம்பிக்கை எனும் செய்தியைத் தருகிறது.
‘’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’’ என்ற அவ்வையாரின் வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை.
காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் அவன் வாய்ப்புகளைத் தனதாக்கிக்கொண்டான்.அதனால்தான் திருநெல்வேலி மதிதா பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.பாரதியார் பயின்ற வகுப்பறையை நிகழ்கால மாணவர்கள் காணும் வகையில் ம.தி.தா இந்துக் கல்லூரிப் மேல்நிலைப்பள்ளி கல்விச்சங்கம் பள்ளிநிகழ்வுகளுடன் ஓவியர் வள்ளிநாயகத்தைக் கொண்டு மனம் கவரும் ஓவியக் காட்சிகளாய் மாற்றித்தந்து மகாகவிக்கு அஞ்சலி செய்து கொண்டிருக்கிறது.
 பாரதிக்கு நடந்த வித்தியாசமான தமிழிசை அஞ்சலி
...............................................................................................................................
அந்த நாளின் வெயிலைக் கூட பாரதி தன் நினைவுகளால் இன்னும் உஷ்ணப்படுத்தியதைப் போல் இருந்தது.பாரதிபக்தர் இசைக்கவி ரமணன் நல்லதோர் வீணையோடும் வீணை எஸ். பாலச்சந்தர் பெயரன் பரத்வாஜ் ராமனோடு  நிகழ்சிக்காக சென்னையில் இருந்து வந்திறங்கினார்.ஒரு நாளில் நிகழ்ச்சியை அழகாக ஏற்பாடு செய்தவர் கல்விச்சங்கத்தின் செயலாளர் செல்லையா பாரதியின் மீது அளவற்ற அன்புகொண்டவர்.
 யாரேனும் செருப்புக்காலோடு தப்பித்தவறியும் உள்ளே போய்விடக்கூடாதே என்ற பதைபதைப்போடு பாரதியார் பயின்ற அந்த திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையைப் பக்தியோடு அந்தப் பள்ளி காத்து வருவது வியக்க வைத்தது.
தமிழ்ப் படைப்பாளியாகத் தொடர்ந்து 50 ஆண்டுகளாக எழுதிவரும் எழுத்தாளர் வண்ணதாசன் நிகழ்சிக்கு வந்திருந்து வாழ்த்தினார்.தொன்மைச் சிறப்பு மிக்க அந்த வகுப்பறையில் பாரதி அமர்ந்திருந்த இடத்தில் மாணவியர் அமரவைக்கப்பட்டனர்.
கல்விச் சங்கச் செயலாளர் மு.செல்லையா வரவேற்றுப் பேசினார்.தலைமையாசிரியர் அழகியசுந்தரம் விழாவுக்குத் தலைமை வகித்தார். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர்,
 முனைவர் ச.மகாதேவன்,’’ மகாகவி பாரதி வறுமையிலும் திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை விடவில்லை.பாரதியின் மனஉறுதி நம் மாணவமாணவியருக்கு வேண்டும்’’
 நல்ல மனங்களின் வருகையால்  அந்த காலைப்பொழுது கலைப்பொழுதாகிக் கொண்டிருந்தது.
தன் பாடல்கள் என்ன ராகத்தில் பாடப்பட வேண்டும் என்று குறிப்புதந்த மகாகவியை ‘’எட்டயபுரத்து சுப்பையா ‘’ பாடலோடு ரமணன் பாரதிக்குள் எங்களை இசையால் அழைத்துச் சென்றார்.அழகான குரலில் அவர்பாடப்பாட
பாரதிஅமர்ந்த இருக்கையில் அமர்ந்திருந்த சிறுகுழந்தைகளும் ரமணன்அய்யாவுடன் தங்களை மறந்து பாடிக்கொண்டிருந்தன.ஓடிவிளையாடுபாப்பா என்று அவர்பாடப்பாட குழந்தைகளும் அப்படலுக்குள் ஓடிவிளையாடிகொண்டே இருந்தனர்.
நூறு ஆண்டுகள் பழமையான அந்த வீணைசரஸ்வதி படத்திற்குக் கீழ் மேடையில் அழகான மயில்படம் போட்ட வீணையை பரத்வாஜ்மீட்டியதும் ரமணன் அதன் நயத்தை அழகாகச் சொன்னதும் பிடித்திருந்தது. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ ‘சின்னஞ் சிறு கிளியெஎன்னும் பாரதி பாடல்களின் நயத்தை ரமணன் விளக்கிச் சொல்ல, பரத்வாஜ் அருமையாக வாசித்தார். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் ரசித்தார்கள். தீராதவிளையாட்டுப் பிள்ளையில் வீணை வேறுவேறு குரல்களால் பேசிப்பேசிப் பாடியது.பாரதி அமர்ந்திருந்த அந்தக் கடைசிப்பெஞ்சில் அமர்ந்தபோது மகாகவியின் நினைவால் அழுகை வந்துவிட்டது.
 
கொங்குதேர் வாழ்க்கை நடத்திய கவிதைத் தும்பி அமர்ந்த இடத்தில் அமர்ந்தோம்..கனிந்தோம்..ஓவியர் வள்ளிநாயகம் இருபத்தெட்டு நாட்கள் தவமிருந்து வரைந்த பாரதிஓவியங்களை வண்ணதாசன்அய்யா நெடுநேரம் உள்வாங்கிக் கொண்டிருந்தார்.பாரதியார் பயின்ற அந்த வகுப்பறையில் அனைவரும் மாணவர்களானோம். பாரதி பிறந்ததினத்தில் மறக்கஇயலா பாரதிஇசை நிகழ்ச்சி முடித்த கையோடு நிறைவாகப் புறப்பட்டோம்.




கலித் தொகையில் உளவியல் கூறுகள்





பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.


நற்றிணை நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல், கற்ற்றிந்தார் ஏத்தும் கலி, அகம் புறமென்ற இத்திறதத எட்டுத் தொகை நூல்களைக் கொண்ட தங்கத் தமிழ், நம் உயரிய சங்கத்தமிழ் பழம் பெருமை, காதல், மணம், பண்பாடு, ஒழுக்கம் யாவற்றையும் பாட்டாலே தொகுத்தளித்தது, பிறநாட்டாரும் போற்றும் வகையில் சங்கப் புலவர்கள் சாதித்தனர்.
      கற்றறிந்தார் களிப்புடன் போற்றும் கலித்தொகை, உளப்பதிவை உவப்புடன் படைத்தளிக்கிறது.  கடவுள்வாழ்த்து உட்பட நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டு குறிஞ்சி, முல்லை. மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வசிக்கும் மாந்தரின் மனவோட்டத்தை அழகியல் நோக்கோடு அற்புதமாகத் தருகிறது கலித்தொகை.
      சொல்லழகு, பொருள் நயம், கருத்துச் செறிவு, ஓசைநயம், உவமை நயத்தோடு கலித்தொகை தமிழரின் வாழ்வியல் வளத்தை எடுத்துரைக்கின்றது.  பாலைக்கலியைப் பெருங்கடுங்கோவும், குறிஞ்சிக் கலியைக்கபிலரும், மருதக் கலியை மருதன் இளநாகானரும், முல்லைக் கலியைச் சோழன் நல்லுருத்திரனாரும், நெய்தற் கலியை நல்லந்துவனாரும் பாடினார்.
      பாலைக்கலியில் “எறித்தரு கதிர்தாங்கி“ எனும் பாடல், உளவியல் சித்திரமாக நம் உள்ளத்தில் உரைக்கிறது.  அழகிய இளம் பெண் தன் தலைவனோடு கொண்ட காதல் உணர்வால், பெற்றோரை விட்டுவிட்டு உளம் புகுந்த உற்றானோடு ஊர் நீங்குகிறாள்.  பெற்ற உள்ளம் நெருப்பிலிட்ட வெண்ணெய்க் கட்டியாய் உருகி வழிகிறது.  தனிமகளைத் தேடித் தாய் நடக்கிறாள்.
      குழப்பத்தில் நம் மனம் உள்ளபோது, சாதாரண கோணம் கூட நம் அறிவுக்கு எட்டாமல் போய்விடுகிறது.  அறிவும் உணர்வும் தராசுத் தட்டுகளைப்போல மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.  நம் துன்பங்களை மூடிமறைத்து, நம் மனத்திற்குள்ளே  புதைக்கும் போது அதுமனச்சிதைவு நோயாக மாறுகிறது.  மற்றவரிடம் சொல்லி, ஆறுதல் தேடும்போது, அவர்கள் உணர்வு நிலைக்கு ஆட்படாமல், மூன்றாவது கோணத்தில் அதே பிரச்சனையைப் பார்க்கிறார்கள்.  சரியான முடிவையும் தருகிறார்கள்.
      “மகளைக் காணாமால் தவித்துத்திரியும் பெண்ணே! உன்னால் பிறந்தால் உன் மகள் உனக்கு மட்டுமே உரியவள் அல்லள்.  மலையிலே பிறந்ததால் யாரேனும் சந்தனத்தை அரைத்து மலைமீது பூசுவார்களா?
      அழகான வெண்முத்து கடலிலே பிறந்தாலும், முத்து மாலையாக்க் கோர்த்து யாரேனும் கடலுக்கு அணிவிப்பார்களா?
      இன்னிசை யாழிலே பிறந்தாலும், யாழுக்கு என்ன பயன்? நினைத்துப் பாரத்த்தால் உன் மகளுக்கும் உனக்குமான உறவும் இப்படிப் பட்டதே“
      என்ற உவமையின் மூலம் தாயின் உள்ளத்தைப் புலவர் ஆறுதல் படுத்த முயல்கிறார்.  இறுதியாகப் பெருங்கடுங்கோ “தாயே! கற்பு நெறியை மேற்கொண்ட காதலனோடு காட்டு வழியில் போய்விட்ட உன் மகள் குறித்து வருந்தாதே, அவள் தலைசிறந்த ஒருவனைத் தன் கணவனாக ஏற்றச் சென்றுள்ளாள்? அது மட்டுமன்று, அவள்வினவுகிறாள்.  மனச்சோர்வு எனும் Depression  அவளை ஆட்டிப் படைக்கிறது.  State Anxiety  எனும் பதட்டம், PHOBIA எனும் மிகை அச்சமாய் மாறப்போகும் நிலையில், அவளை ஆற்றுப்படுத்த பாலை பாடிய பெருங்கடுங்கோ, வழிப்போக்கர்களாக அந்தணர்களை அனுப்பி, அவள் மனதை ஆற்றுப்படுத்துகிறார்.
      “பலவுறு நறும்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்களால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே,
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
“சூழுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
என வாங்கு,
இறந்த கற்பினாட்டு எவ்வம் படரன்மின்,
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்,
அறந்தலை பிரியா ஆறும் மற்றதுவே“
எனத் துடித்தவள், தன் தோழியை அழைத்து “அவனுக்கு எக்கேடும் ஏற்படாமல் இருக்க, கடவுளை வேண்டலாமா?“ என்று கேட்கிறாள்.
“பாடு இன்றிப் பசந்தகண், பைதல பணிமல்க
வாடுபு வனப்பு ஓடி, வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி
நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்“

என்ற பாடல் மனச்சோர்வுக்குக் காரணமான பிரிவுத் துயரினை அழகாக விள்க்குகிறது.
      கலித்தொகை, தலைவன் தலைவியின் காதல் உணர்வினை உளவியல் நோக்கில் படம் பிடித்துக் காட்டுகிறது.  இரு மனம் இணைந்து திருமணம் ஒழுக்கத்தில் ஈடுபடும் வரை ஏற்படும், தவிப்பு, அச்சம், பதட்டம், பிரிவுத்துயர், ஆகியவற்றை நுண்ணிய உணர்வுப் பதிவாகத் தருகிறது.   “வருவேன்“ எனக் கூறிச் சென்ற தலைவன், வராகத காரணத்தால் ஏற்பட்ட உணர்வுக் கொந்தளிப்பைக் கலித்தொகை சிறந்த உவமைகளால் விளக்குகிறது.
      தேன் உண்ட பூ, தனித்துக்கிடக்க அதை விட்டு, வேறு புதுப் பூக்களைத் தேடிச் சென்ற அழகிய நீலமணி பொன்ற நிறம் பெற்ற தும்பியைக் கொண்டு தலைவனின் மனவுணர்வினை விளக்கும் பாடல்
      “வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
       மாஅல் அம்சிறை மணிநிறத்தும்பி“
என்று கலித்தொகை விளக்குகிறது.  நூலில் தொங்கும் ஊசலாய், தவிப்பில் தொங்கும் தனி ஊசலானது அந்தத்தாயின் மனம்.  உளவியல் அவளது உணர்வினைப் பகுப்பாய்வு செய்யத் துணைக்கு வருகிறது.  பாலூட்டிச் சீராட்டி வளர்த்த மகள், தூக்கி எறிந்து அப்பால் போனதை அவளால் தாங்க முடியவில்லை.  “உள்ளமுறிவு எவ்வகைத் தீர்வும் இன்றித் தொடருமானால் உள்ள இறுக்கம் அதாவது Stress தோன்றும்.  உள்ள முறிவின் காரணமாக, எதிர்மறையான Emotion எனும் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுகின்றன.  அப்போது சினம், அச்சம், கவலை எனும் மூன்று நிலைகளை மனம் சென்றடைகிறது“ என்று உளவியல் அறிஞர்கள் குறித்ததற்கேற்ப, “தன் மகள் இப்படிச் செய்து விட்டாளே“ என்ற சினம் அத் தாய்க்கு வருகிறது.
உடன் எதார்த்த நிலைக்கு அத் தாய் வருகிறாள்.  “கைப்பிடித்த மணவாளன் நல்லவனா? கவவுக்கை நெகிழாமல் காப்பானா? என்ற அச்சம் அந்தக் கலித்தொகைத் தாய்க்கு வருகிறது.  கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிகிறது.  “உலகில் நடக்காததா நம் வீட்டில் நடந்து விட்டது!.  போனது போகட்டும்.  அவளைக் காணமுடியுமா? எந்த ஊரில் வாழ்கிறாள் எனத் தெரியவில்லையே என்ற கவலை அத்தாயை ஆட்டிப் படைக்கிறது.  “எத்தைத் தின்றால் பித்தைத் தெளியுமென்று“ வழியில் கண்டோரிடமெல்லாம் தன் மகள் குறித்து கூறஅவள் செயல், உலகியல் அறத்தோடு ஓட்டியதும் ஆகும்“  என்று ஆறுதல் கூறுகிறார்.
கலித்தொகைப் பாடல்களில் ஊடாடிக் கிடக்கும் உணர்வு “பிரிவு“ என்பதாகும்.  அதை உளவியல் விளக்குகிறது.  பொருள்தேடப் பிரிவு, ஊர் நீங்கும் பிரிவு, உலகத்தை விட்டே பிரிவு எனப் பிரிவு ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களைத் தொடர்கிறது.  பிரிவுத்துயர் எல்லை கடக்கும் போது, அது மனத்தின் சமநிலையையே பாதிக்கிறது.
செல்லேன் என்றேல் எனக்குரை, மற்றுநின்
வல்வரவு வாழ்வாற்க்குரை“
என்று இன்பத்துப்பாலில் திருவள்ளுவர், பிரிவை விளக்க முயல்கிறார்.
களவு வாழ்வு வாழ்ந்த போது, “உன்னை என்றும் பிரியேன்“ என உரைத்தவன், கற்பு வாழ்க்கையில் பொருளீட்டப் பிரிவை மேற்கொள்கிறான்.  பிரிவு அவளை வாட்டுகிறது.  பொருளீட்டி சென்றவன், தன் வாழ்வைப் பொருளில்லாது ஆக்கினானோ“ என்று வருந்துகிறார்.
வாக்குறுதி பொய்க்கும் போது, வழிக்கொடுமைகள் அவனை வருத்திக் கெடுக்குமா? வாக்கு தவறிய அவனது போக்கு கண்டு இயற்கை தண்டிக்குமா? மனித மனம் விந்தையானது, மனித மனம் அற்புதங்களின் நிலைக்களனாய் அமைவது, சிக்மண்ட் பிராய்டு, யூங், போன்ற உளவியல் அறிஞர்கள் உளவியலுக்கான ஆய்வுகளை மேற்கொண்டனர்.  டேகார்ட், வில்லியம் மேதைகள் உளவியல் அறிஞர்களாகவும் திகழ்ந்து உளப்பொருத்தப்பாட்டினை, உளச்சிக்கல்களைப் படம் பிடித்துக் காட்டினர்.  சங்க இலக்கியப் புலவர்கள் உளவியல் நோக்குடையவர்களாகவே திகழ்ந்தனர்.
“உடையும் என் உள்ளம்“
“இணர் இறுபு உடையும் நெஞ்சம்“
“உடுவது போலும் என் நெஞ்சம்“
ஆகிய தொடர்களால் உள்ள முறிவினைச் சங்க இலக்கியம் சுட்டுகிறது.
கலித்தொகை உணர்வுப் பிழம்பான இலக்கியமாகத் திகழ்வதால், ஒவ்வொரு பாடலையும் பிராய்டிசத்தோடு, யூங்கின் கருத்தாக்கத்தோடு பகுப்பாய்வு செய்து பார்க்க முடிகிறது.
      சிக்மண்ட் பிராய்டு, ஒரு தனியனை, மையம் அற்றவனாகத் தன்னுணர்வு, ஆதார இச்சை, (Ego, Id, Super Ego) என்ற மும்மைப் பண்போடு கட்டமைத்துள்ளார்.  கலித்தொகைத் தலைவனும் இப்பண்புகளோடு திகழ்கிறான்.  மோகம் என்பது அவனது அடையாளமாகத் திகழ்கிறது.  அத்தலைவன் தலைவியின் மீது கொண்ட காதல், அடையாளம் சார்ந்ததாகவே திகழ்கிறது.  அவனது தன்னுணர்வின் மிகுதியாக அமையும் கற்புவாழ்க்கையைக் கலித்தொகை அழகாக விளக்குகிறது.
      உளவியல் என்னும் விளக்கின் துணையோடு இலக்கியத்தைக் குறிப்பாகக் கலித்தொகையை, உட்புகுந்து ஆராய்ந்தால் இன்னும் அதிகமான செய்திகள் புலப்படும். 
      இலக்கியம் என்பது உள்ளத்து உணர்வின் எழுத்துப் பதிவு.
       உளவியல் என்பது உள்ளத்து உணர்வின் நுண்ணிய பதிவு.
      இரண்டும் சேரும் போது, வாசகனுக்குப் புதிய உண்மைகள் புலப்படுகின்றன.